தென்பெண்ணை குறுக்கே அணை : தடுக்க ஜெயலலிதா வலியுறுத்தல்

Webdunia

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2007 (15:41 IST)
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி மேற்கொள்ளும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசிற்கு தொலை நோக்கு சிந்தனை இல்லாத காரணத்தால் தமிழகம் பல்வேறு விதங்களில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக ஓசூர் அருகே தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பு அணை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே முகளூர் என்ற இடத்தில் ரூ.50 கோடி திட்ட மதிப்பீட்டில் தடுப்பு அணை கட்ட கர்நாடக அரசு திட்டம் நிறைவேற்றி அதனை செயல்படுத்துவதற்கு முனைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதையும், முகாமிட்டுள்ளதையும், முகளூர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பார்த்துள்ளனர் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் நீர் ஆதாரங்களைத் தடுக்கும் முயற்சியாக கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றில் தடுப்பு அணை கட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்