மணல் கொள்ளைக்கு துணை போனால் கடும் நடவடிக்கை: கருணாநிதி

Webdunia

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2007 (09:28 IST)
மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குவாரிகளில் இருந்து மணல் எடுப்பதிலும், விற்பனை செய்வதிலும் தவறுகள் நடப்பதாக செய்திகள் வெளியாகின. சில பகுதிகளில் மணல் கொள்ளை நடப்பதாகவும் புகார்கள் வந்தன. இது தொடர்பாக ஆலோசிக்க உயர் அதிகாரிகள் கூட்டம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மணல் எடுப்பதிலும், விற்பதிலும் நடக்கும் தவறுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கருணாநிதி கருத்து கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகள் நடக்காமல் இருக்க, பொதுப் பணித்துறை மூலமாக அரசே குவாரியில் இருந்து நேரடியாக மணல் எடுக்கலாமா என்றும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

மணல் எடுப்பதில் எந்தவிதமான முறைகேடுகளும் நடக்காமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும், அதில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் முதலமைசர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்