மதானி உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை!

Webdunia

புதன், 1 ஆகஸ்ட் 2007 (21:20 IST)
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றங்கள் நிரூபிக்கப்டவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்ட அப்துல் நாசர் மதானி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்!

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கோவை மாநகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமடைந்தனர்.

இவ்வழக்கில் 14வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கேரளத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி, கோவை தொடர் குண்டு வெடிப்பு சதித் திட்டம் தீட்டியதாகவும், அதற்கான வெடிபொருட்களை பெற்றுத் தந்ததாகவும், வெடிபொருட்களை கேரளத்தில் இருந்து கோவைக்கு கொண்டுவர உதவியதாகவும் குற்றம் சாற்றப்பட்டார்.

மதானி மீது கூறப்பட்ட 5 குற்றச்சாற்றுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று இவ்வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்திராபதி தீர்ப்பளித்தார். ஆனால் மதானியை விடுதலை செய்ய மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், மதானி உட்பட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று தான் தீர்ப்பளித்த 8 பேரையும் இன்று மாலை பிணையில் விடுவிப்பதாக நீதிபதி உத்திராபதி உத்தரவிட்டார்.

9 ஆண்டுக்காலம் கோவை சிறையில் இருந்த அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டதும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்று கூட்டிச் சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்