இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தாக்கியுள்ளதால் இந்திய முட்டைக்கு ஏமன், இலங்கை நாடுகள் தடை விதித்துள்ளன. இதன் காரணமாக நாமக்கல்லில் முட்டைகள் தேங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு கோடியே ஐந்து லட்சம் முட்டைகளில் நாள் தோறும் 50 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
கடந்த வாரம் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் தாக்கியிருப்பதை மத்திய அரசு உறுதிசெய்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த லட்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டன.
உலக சுகாதார நிறுவனம் (ஓ.ஐ.இ.,) இந்தியாவில் பறவை காய்ச்சல் உள்ளதாக அனைத்து நாடுகளுக்கும் அறிவிப்பு வெளியிட்டது. ஓ.ஐ.இ.யில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளும் ஒவ்வொன்றாக இந்திய முட்டை இறக்குமதிக்கு தடைவிதித்து வருகின்றன.
இலங்கை, ஏமன் அரசுகள் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளன. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் மார்க்கெட் விடுமுறை என்பதால், ஒரு சில நாளில் தடை குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
ஓ.ஐ.இ.யில் உறுப்பினராக இல்லாத தென்ஆப்ரிக்க நாட்டுக்கு மட்டும் நாமக்கல்லில் இருந்து தினமும் முட்டை ஏற்றுமதியாகிறது.
தினமும் ஏற்றுமதிக்கு சென்று கொண்டிருந்த 40 லட்சம் முட்டை, கடந்த மூன்று நாட்களாக தேங்கி வருகிறது. ஏற்றுமதிக்கு அடுத்தபடியாக நாமக்கல் முட்டைக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் இருந்து வந்தது. பறவை காய்ச்சல் பீதியால் அங்கு முட்டை நுகர்வு குறைந்து வருகிறது. அதனால் நாளொன்றுக்கு 20 லட்சம் முட்டை மட்டுமே செல்கிறது.
பறவை காய்ச்சல் பீதியால், நாமக்கல் மண்டலத்தில் மட்டும் தினமும் ஒரு கோடி முட்டை தேங்கி வருகிறது. இதுவரை மூன்று கோடி முட்டைகள் தேங்கியிருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே நிலை நீடித்தால் வரும் நாட்களில் ஐந்து கோடிக்கும் மேல் முட்டைகள் தேங்கிவிடும்; விலை கடும் வீழ்ச்சி அடையும் என பண்ணையாளர் பெரும் கவலையில் உள்ளனர். பறவை காய்ச்சல் பீதியை கட்டுப்படுத்த, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.