ராமநாதபுரத்தில் அதிமுக ஆர்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு

Webdunia

சனி, 28 ஜூலை 2007 (15:33 IST)
மதுரை - இராமேஸ்வரம் இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ரயில் இயக்கப்படாததை கண்டித்து வருகிற 31 ஆம் தேதி அதிமுக சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை அகல ரெயில் பாதை திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு 2 மாத காலம் ஆகியும் சிறப்பு வாய்ந்த ராமேஸ்வரத்திற்கு இதுவரை அகல ரெயில் பாதை திறக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

தேசிய சுற்றுலாத் தளமான ராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா உள்ளிட்ட பகுதிகளில் ரெயில் போக்குவரத்து இல்லாத காரணத்தால் பயணிகளும், தொழிலாளர்களும், வியாபாரிகளும் பெரிதும் சிரமப்பட்டு வருவதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மதுரை முதல் ராமேஸ்வரம் வரை அகல ரெயில் திட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில் பொது மக்கள் பயன் பாட்டிற்காக உடனடியாக ரயில் இயக்கப்படாமல், மக்கள் நலனை புறக்கணித்து வரும் மத்திய அரசையும், மத்திய கூட்டணி அரசில் பங்கு வகிக்கும் திமுக அரசையும் கண்டித்து அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில் வருகிற 31 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்