என்.எல்.சி. வேலை நிறுத்தம் முடிந்தது!

Webdunia

வியாழன், 19 ஜூலை 2007 (14:33 IST)
தங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் தினக்கூலி ரூ.19.23 ஆக உயர்த்துவதற்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஒப்புக்கொண்டதை அடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டனர்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சுமார் 13,000 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றிவருகின்றனர். இவர்கள், தங்களுக்கு கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.

வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர சென்னையில் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிர்வாகத்தின் துணைப் பொது மேலாளர் முத்து தலைமையிலான குழுவினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

தினக்கூலியை உயர்த்த ஒப்புக் கொண்டது மட்டுமின்றி, கடந்த மூன்றரை ஆண்டுகளாக கூலி உயர்விற்கான மொத்தத் தொகையையும், சராசரியாக தொழிலாளர்களுக்கு ரூ.20,000 வரை அளிக்க என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக் கொண்டது.

மாத ஊதியமாக வங்கிகளின் மூலம் ஊதியத்தை அளிக்கவும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் மருத்துவ வசதிகளை நல்கவும், அவர்களுக்கு போனஸ் அளிப்பது குறித்து பரிசீலனை செய்யவும் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஐ.டி.யூ.சி. செயலர் எம். சேகர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்