கூட்டுறவுத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பதால் இந்த தேர்தலில் பாமக பங்கேற்காது என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் என்றால் துளியாவது ஜனநாயக மரபுகள் பின்பற்றப்பட வேண்டும். தேர்தல் முறையாக நடத்தப்பட மாட்டாது என்று எதிர் கட்சிகள் கூட்டுறவுத் தேர்தலை புறக்கணித்து விட்டன.
எதிர்கட்சிகள் புறக்கணித்து விட்ட நிலையில், தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி, ஜனநாயக நெறி முறைப்படி இந்தத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கூட்டுறவுத் தேர்தலில் 90 சதவீத இடங்களில் முறைகேடுகள் நடத்திருப்பதாகவும், ஆளும் கட்சியினருடன் அதிகாரிகள் இணைந்து இந்த முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தங்களுக்கு ஏற்புடையதல்ல என்றும், இத்தகைய சூழ்நிலையில் கூட்டுறவுத் தேர்தலில் பங்கு பெற வேண்டியதில்லை என்ற முடிவுக்கு பாமக தள்ளப்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அனைத்து கூட்டுறவுத் தேர்தலில் பாமக பங்கேற்காது என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.