நிரம்பும் தருவாயில் அமராவதி!

Webdunia

வெள்ளி, 6 ஜூலை 2007 (11:25 IST)
கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் சின்னாறு, கூட்டாறு நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் தற்போது 87.77 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை அணையில் இருந்து பாசனத்திற்காக 5 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

அணைக்கு தற்போது வினாடிக்கு 2,133 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் முழுக் கொள்ளளவு 90 அடி. தற்போதே 87.77 அடி இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் அணை நிரம்பிவிடும்.

இதனால் அணையின் பாதுகாப்பிற்காக அணையின் உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார். தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் அமராவதி அணையின் தண்ணீரை நம்பியிருக்கும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் அமராவதி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

அமராவதி அணை ஜூலை மாதத்தில் நிரம்புவது என்பது அரிதானதாகும். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூலை மாதத்தல் தற்போதுதான் அமராவதி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்