தி.மு.க.வுடன் பாட்டாளி மக்கள் கட்சி கொண்டிருந்த உறவு தொகுதி பங்கீடு அடிப்படையிலானது, அது தேர்தலுடன் முடிந்துவிட்டது என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்!
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணம் தொடர்பாக அரசை கடுமையாக விமர்சித்த மருத்துவர் ராமதாஸ், தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
"2006 சட்டப் பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீட்டின் அடிப்படையில் தி.மு.க. - பா.ம.க. இடையே அரசியல் ரீதியான நட்பு இருந்தது. அது தேர்தலுடன் முடிந்துவிட்டது" என்று கூறிய ராமதாஸ், "தேர்தலிற்குப் பிறகு தி.மு.க. ஆளும் கட்சி, பா.ம.க. எதிர்க்கட்சி. ஆனால், எதிரி கட்சி அல்ல. நட்புடன் கூடிய கட்சி என்றும் கூறினார்.
தி.மு.க. அரசிற்கு அளித்துவரும் ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிய ராமதாஸ், அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தொடரும் என்றும், இதனை எழுத்துப்பூர்வமாக அளிக்கவும் தான் தயாராக உள்ளதாகவும் கூறினார்.
"இவ்வாறு நாங்கள் கூறுவதால் ஒரு எதிர்க்கட்சியாக மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளை பாட்டாளி மக்கள் கட்சி எடுத்துக் கூறாது என்று அர்த்தமல்ல. அரசின் கவனத்தை செய்தித்தாள்கள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்" என்று ராமதாஸ் கூறினார்.
தான் இவ்வாறு கூறியதை சாதகமாக எடுத்துக் கொண்டு தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் பா.ம.க. இருக்குமா? வெளியேறுமா? என்பது குறித்து ஊடகங்கள் எந்த அவசர முடிவும் எடுத்துவிடக் கூடாது என்றும் ராமதாஸ் கூறினார்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் மக்கள் பிரச்சனைகள் சிலவற்றில் தி.மு.க. போராட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டிய ராமதாஸ், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதீதமாக கட்டணம் வசூலிப்பது குறித்து மாணவர்களோ, பெற்றோர்களோ புகார் அளித்தால் அவர்கள் கல்லூரி நிர்வாகங்களால் பழிவாங்கப்பட மாட்டார்கள் என்கின்ற உறுதியை அரசு அளிக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
அப்படிப்பட்ட உறுதியை அரசு வழங்குமானால் ஆயிரக்கணக்கில் மாணவர்களையும், பெற்றோர்களையும் கொண்டுவந்து நிறுத்தி புகார் கொடுக்க வைக்கத் தயார் என்று ராமதாஸ் கூறினார்.
சுயநிதிக் கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பதற்கு எதிராக தமிழக அரசு 1992 ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டம் அரசிற்கு வானளாவிய அதிகாரங்களை அளித்துள்ளது என்று கூறிய ராமதாஸ், இந்தப் பிரச்சனையில் அரசு பொறுப்புடன் செயல்படவில்லை என்று குற்றம் சாற்றினார்.
இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் நன்கொடை என்று கூறி நடைபெற்று வரும் வசூல் மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கும் என்று ராமதாஸ் கூறினார். (யு.என்.ஐ.)