நக்சலைட்டுகளை பிடிக்க அதிரடிப்படை தேடுதல் வேட்டை

Webdunia

வியாழன், 5 ஜூலை 2007 (12:06 IST)
தமிழகத்தில் ஊடுருவியுள்ள நக்சலைட் தீவிரவாதிகளை பிடிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் காவல் டி.ஜி.பி.விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை முருகமலை காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் முருகமலை காட்டுப்பகுதியில் மக்கள் போர்ப் படையை சேர்ந்த நக்சலைட் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நக்சலைட்டுகளை ஒடுக்க முதலமைச்சர் கருணாநிதி காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக கூடுதல் காவல் டி.ஜி.பி.விஜயகுமாரை அழைத்து அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நக்சலைட்டுகளை பிடிக்கும் சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, விஜயகுமார் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விரைந்தார். அங்கிருந்து அவர் தேனி மாவட்டத்திற்கு சென்றார்.

தேனி மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து,விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை முருகமலை காட்டுப்பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்