பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாயுக் கூட்டம் வருகிற 18 ஆம் தேதி தொடங்கும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்து, மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்தது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சிறுபான்மையோர் அல்லாத கல்லூரிகள் 65 விழுக்காடு இடங்களையும், சிறுபான்மையோர் கல்லூரிகள் 50 விழுக்காடு இடங்களையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களையும் ஒற்றைச் சாளர முறையிலேயே நிரப்ப வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில் அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கான தேதியை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்தார். 2007 - 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம் வருகிற 18 ஆம் தேதி தொடங்கி, 22 ஆம் தேதி வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார்.