காவிரி உற்பத்தியாகும் குடகு மலைப் பகுதியில் நேற்று ஒரே நாளில் 59 செ.மீ. மழை கொட்டியது.
குடகு மலைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக காவிரி மீது கட்டப்பட்டுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து பெரும் அளவிற்கு அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரியில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்துவிடுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங் குள்ள கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, ஹேமாவதி, கபினி அணைகளின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்தது.
தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. 124 அடி கொள்ளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 91 அடி யாக உயர்ந்தது. அணையில் இருந்து தற்போது 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் வரை 73 அடி தண்ணீரை தேக்கி வைத்திருந்த கபினி அணை நேற்று ஒரே நாளில் அதன் முழு கொள்ளளவான 75 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக திறந்து விடப்படுகிறது. அதன்படி கபினியில் இருந்து 16,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் கர்நாடகத்தில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வரத்தொடங்கியிருப்பதால் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வந்த ஒகேனக்கலுக்கு நேற்று இரவு 5,500 கன அடி வரை தண்ணீர் வரத் தொடங்கியது.
அதிக நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் வரை 800 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 6, 680 கன அடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 73.35 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,680 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் காவிரி டெல்டா பாச னத்திற்காக ஆண்டு தோறும் ஜுன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படும் அணை இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்தனர்.
ஆனால் தற் போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளதை அடுத்து குறுவை சாகுபடியை நம்பி இருக்கும் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.