அமெரிக்க அணுசக்தி போர்க்கப்பல் நிமிட்ஸ் இன்று காலை சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே நிமிட்ஸ் கப்பல் இன்று காலை சென்னை துறைமுகப் பகுதிகளில் தரைப் பகுதியில் இருந்து 2 மைல்கள் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கப்பலின் கேப்டன்கள் இருவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர். அப்போது, இந்த கப்பல் அணுசக்தியால் இயங்குவதால்தான் இந்த அளவிற்கு அச்சமும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்பம் கடந்த 57 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டதில்லை. அதில் இருக்கும் நாங்கள் மிகுந்த பாதுகாப்பை உணர்கிறோம் என்று தெரிவித்தனர்.
அமெரிக்க - இந்திய ராணுவங்களுக்கு இடையிலான நட்பின் அடிப்படையில் சென்னை துறைமுகப்பகுதிக்கு நிமிட்ஸ் கப்பல் வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு சென்னை துறைமுகம் அருகே 2 கடல் மைல் (3.7 கிலோ மீட்டர்) தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்தும் இந்த கப்பலை பார்க்க முடியும். 5-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அந்த கப்பல் சென்னையில் இருந்து புறப்பட்டுச்செல்லும்.
அணுசக்தியால் இயங்கும் கப்பல் என்பதால் நிமிட்ஸ் சென்னை வருவதற்கு இடதுசாரி கட்சிகளும், பல்வேறு சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் இந்த கப்பலால் அணு கதிர்வீச்சு ஆபத்து எதுவும் இல்லை என்று இந்திய கடற்படை திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. என்றாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அணு கதிர்வீச்சை கண்காணிப்பதற்காக இந்திய கடற்படை கப்பல் ஒன்றை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கப்பலில் 5 ஆயிரம் அமெரிக்க கடற்படை வீரர்களும், 450 அதிகாரிகளும் வருகிறார்கள். இவர்கள் சென்னையில் 5-ந் தேதி வரை தங்கி இருந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள்.