மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பையோ அல்லது வாக்காளர் கணிப்பையோ வெளியிடக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் செவ்வாய்க்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வரும் 5 மணிக்குப் பிறகு எந்தக் கருத்துக் கணிப்பையும் பத்திரிக்கைகளோ அல்லது மற்ற ஊடகங்களோ வெளியிடக் கூடாது என்றும், தேர்தல் நாளன்று வாக்களித்து விட்டு வரும் வாக்காளர்களிடம் கருத்துக் கேட்டு வாக்குக் கணிப்பு எதையும் வெளியிடக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் சற்று முன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தங்கியுள்ள அரசியல் கட்சியினர் உட்பட வெளி ஆட்கள் அனைவரும் வெளியேறிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணைய அறிக்கை கூறுகிறது.
மத்திய மாநில அரசுகளால் பாதுகாப்பு வழங்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியைச் சேராத அனைத்து அரசியல் பிரமுகர்களும் அங்கிருந்து வெளியேறுவதை மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் காவல்துறை கண்காணிப்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.