தமிழகத்தில் பரவலாக மழை: மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கும்

Webdunia

வியாழன், 21 ஜூன் 2007 (11:10 IST)
தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தால், தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் லேசான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படுள்ளதையடுத்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வால்பாறையில் அதிகபட்சமாக 40 மி.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் 30 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தாம்பரம், பொள்ளாச்சி, செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, அரக்கோணம், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் 10 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அண்டை மாநிலங்களான கேரளாவிலும்,கர்நாடகத்திலும் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கபினிக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கபினியில் இருந்து வரும் உபரி நீரின் அளவு அதிகரிக்கும்.

இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் அதே இடத்தில் நீடிப்பதால் மேலும் இரண்டு நாட்கள் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்