பெருந்துறை "சிப்காட்' தொழில் மைய விரிவாக்க திட்டத்துக்கு தமிழக அரசு கம்புளியம்பட்டி கிராமத்தில் 1,500 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதை கண்டித்து பெருந்துறையில் நேற்று பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
நிலம் கையகப்படுத்தும் திட்டத்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், விசைத்தறி தொழிலாளர்களும் சொந்த மண்ணையும், தொழிலையும் விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த மாதம் 7ம் தேதி பெருந்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஊர்வலம் மற்றும் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், மறுநாளே தமிழக சட்டசபையில் முதல்வர், "இத்திட்டம் நிறைவேற்றப்படும்' என அறிவித்தார்.
ஏற்கனவே "சிப்காட்'ல் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் மிக மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளது.
சிப்காட் விரிவாக்கத்தில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் போது மக்கள் அப்பகுதியில் வாழ முடியாமல் வெளியேறக் கூடிய நிலை உருவாகும். ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் இத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இத்திட்டத்தை கண்டித்து நேற்று பெருந்துறை தாலுகா அலுவலகம் அருகில் பொதுமக்கள், விவசாயிகள், விசைத்தறி தொழிலாளர்கள், சர்வகட்சியினர் மற்றும் பொது நல அமைப்புகள் உண்ணாவிரதம் இருந்தனர்.