இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த சிலர் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 2 தமிழக மீனவர்கள் காயமடைந்தனர்.
சனிக்கிழமை இரவு தங்கச்சிமடம் பகுதியில் இருந்து தமிழக மீனவர்கள் இயந்திரப் படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
கட்சத்தீவுப் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஃபைபர் கண்ணாடி படகுகளில் இலங்கையைச் சேர்ந்த 4 பேர் அங்கே வந்து தமிழக மீனவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் 3 கையெறி குண்டுகளை தமிழக மீனவர்கள் வந்த படகுகள் மீது வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பாலமுருகனும், போத்தாகர் ராஜூம் காயமடைந்தனர். உடன் சென்ற சுசி மற்றும் பிரவீன் குமார் காயமின்றி தப்பித்தனர்.
மிகவும் சிரமப்பட்டு நால்வரும் நேற்று கரைக்கு வந்து சேர்ந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களை தாக்கியவர்கள் பற்றிய உண்மையான தகவல் இன்னும் தெரிய வரவில்லை.