கோடநாடு எஸ்டேட்: கருத்தை தெரிவிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Webdunia

செவ்வாய், 12 ஜூன் 2007 (10:13 IST)
கோடநாடு எஸ்டேட் கட்டிடத்தை இடிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு கருத்து தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொத்தகிரி யூனியன் பஞ்சாயத்து தலைவர் கே.எம்.ராஜூ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கோடநாடு எஸ்டேட்டை கடந்த 2005ஆம் ஆண்டு ராதா வெங்கடேஷன் உட்பட பெண்களிடமிருந்து இளவரசி சுதாகரன் ஆகியோர் வாங்கியதாகவும், அதன் பின்னர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, அந்த எஸ்டேட்டில் 90 அறைகள் கொண்ட பெரிய பங்களா கட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம், வனத்துறை சட்டம் ஆகியவற்றை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்றும், எனவே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அந்த கட்டிடத்தை இடிக்க வேண்டுமென்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுயிருந்தார்.

தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.டி.கோபாலனும் அரசு சார்பில் வழக்கறிஞர் ராஜாகலிபுல்லாவும் ஆஜராகி வாதிட்டனா.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக அரசிடம் கருத்து கேட்டு பதில் அளிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்