நீரிழிவு, மனநோய், மாரடைப்பு அதிகரிக்கும் அபாயம் : அன்புமணி!

Webdunia

திங்கள், 11 ஜூன் 2007 (14:01 IST)
இந்தியாவில் நீரிழிவு, மனநோய், புற்றுநோய், மாரடைப்பு போன்ற தொற்று நோயற்ற கொடு நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதென ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்!

சென்னையில் உள்ள கண் மருத்துவமனையில் நடந்த விழாவில், குருடற்ற இந்தியாவை நிஜமாக்கும் திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ், நமது நாட்டில் தற்பொழுது 1.2 கோடி மக்கள் பார்வை இழந்தவர்களாக உள்ளனர் என்றும், இந்த நிலையை முற்றிலும் மாற்றி 2015 ஆம் ஆண்டிற்குள் பார்வையற்றவர்கள் எவரும் இல்லை என்ற நிலையை உருவாக்கும் இலக்கை இந்தியா எட்டும் என்று கூறினார்.

நமது நாட்டின் மொத்த மக்கட்தொகையில் 1.1 விழுக்காடாக உள்ள பார்வையிழந்தோர் எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டிற்குள் 0.8 விழுக்காடாக குறையும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள 0.3 விழுக்காட்டை எட்டும் என்றும் உறுதியுடன் ராமதாஸ் கூறினார்.

கண்பார்வையற்ற நிலையை ஒழிப்பதற்காக அரசு செலவிடும் நிதியில் 70 விழுக்காடு தனியார் மருத்துவமனைகளுக்கே அளிக்கப்படுவதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விளைவுகள் மகிழ்ச்சி தருவதாக உள்ளது என்றும் அன்புமணி கூறினார்.

கண்ணில் புறை தோன்றுதலே பார்வை இழப்பிற்கான முக்கிய காரணியாக உள்ளது என்றும், அதனை நீக்க நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அன்புமணி, 2006 ஆம் ஆண்டில் மட்டும் 52 லட்சம் பேருக்கு புறை நீக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதென கூறினார்.

கண், மூக்கு, தொண்டை, காது ஆகியவை தொடர்பான மருத்துவத்தை ஊக்கப்படுத்த தேச அளவில் நலத் திட்ட பள்ளி ஒன்றை மத்திய அரசு துவக்க திட்டமிட்டுள்ளது என்று அன்புமணி கூறினார். (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்