தமிழ் ஆட்சி மொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுவே தன்னுடைய பிறந்த நாள் விரும்பம் என்றும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதியின் 84 - வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று காலை முதலமைச்சர் கருணாநிதி அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்த மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் அவர் தொடங்கிவைத்தார்.
பின்னர், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வுகாண தென்னக நதிகளை இணைக்ககோரி பிரதாமர் மன்மோகன் சிங்கிடம் தாம் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
நதிகள் இணைக்கப்பட வேண்டும், மத்தியில் தமிழும் ஆட்சி மொழியாக வேண்டும் என்பது தமது நீண்ட நாள் ஆசை என்றும், இதுவே தமது பிறந்த நாள் விருப்பம் என்றும், கூறிய முதலமைச்சர் கருணாநிதி இதற்கான முயற்சியில் ஈடுபட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.