மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டிய 6 பேரில் அதிமுக சார்பில் மைத்ரேயன், இளவரசன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்!
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் மாதம் 15ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் நான்கு பேரும், எதிர்க்கட்சியான அஇஅதிமுக கூட்டணி சார்பில் 2 பேரும் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
இத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தற்பொழுது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் டாக்டர் வா. மைத்ரேயனும், பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக செயலரும், வழக்கறிஞருமான ஆ. இளவரசனும் நிறுத்தப்படுவார்கள் என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
திமுக சார்பில் மக்களவை முன்னாள் உறுப்பினர் திருச்சி சிவாவும், கவிஞர் கனிமொழியும் நிறுத்தப்பட்டுள்ளார்கள். திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் அகில இந்திய செயலர் து. ராஜா நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.