திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் 27 பேர் பலி!

மழையால் சுவர் இடிந்து அருகில் இருந்த டாஸ்மார்க் மதுபான பார் மீது விழுந்ததில், அங்கு இருந்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள அரசு டாஸ்மார்க் கடையின் பின்புறம் இருந்த சுவர், நேற்று இரவு 7.30 மணியளவில் இடிந்து விழுந்தது. மதுக்கடையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் இந்த இடிபாடுகளில் சிக்கி பலியாயினர்.

மதுக்கடையின் பின்புறம் மது அருந்தும் இடம் இருந்தது. அதையொட்டி தனியார் ஒருவர் 22 அடி உயரத்தில் கற்களால் சுவர் அமைத்திருந்தார். இந்நிலையில், நேற்று திருப்பூர் சுற்றுப் பகுதியில் மாலை 5 மணியில் இருந்து பலத்த மழை பெய்தது.

இரவு நேரம் ஆகையால் மதுக்கடையில் அதிக கூட்டம் காணப்பட்டது. அப்போது 100 அடி நீளம் கொண்ட அந்த பெரிய மதில்சுவர் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

கனமான கருங்கற்களால் கட்டப்பட்ட சுவற்றுக்கு அடியில் சிக்கியவர்களால் தப்பிக்க இயலவில்லை. இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. தடைகளை அகற்றும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு இடிபாடுகளில் சிக்கியிருந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்