அமெரிக்கா செல்வதற்கு நுழைவுச் சீட்டு வேண்டி இந்தாண்டு இந்தியாவில் இருந்து 6 லட்சம் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க தூதரக உயர் அதிகாரி டேவிட் டி. ஹூப்பர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் புதிய தகவல் தொடு திரை திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தூதரக உயர் அதிகாரி டேவிட் டி. ஹூப்பர் நுழைவுச் சீட்டு பெறுவதில் இடைத்தரகர்களை நம்பவேண்டாம் என்றார்.
நுழைவுச் சீட்டு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 700 முதல் 800 விண்ணப்பங்கள் பரிசீலித்து வந்ததாக தெரிவித்த அவர் இனி நாள்தோறும் 1200 விண்ணப்பங்கள் பரிசீக்கப்பபட இருப்பதாக தெரிவித்தார்.
நுழைவுச் சீட்டு பெற உரிய ஆவணங்களை முறையாக விண்ணப்பத்துடன் சேர்த்திருந்தால் விரைவில் நுழைவுச் சீட்டு கிடைத்துவிடும் என்று தெரிவித்த ஹூப்பர் இந்தியாவில் இருந்து இந்தாண்டு 6 லட்சம் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.