ஹர்பஜன் மீது மீண்டும் அவதூறு-இந்திய நிர்வாகம் கோபம்
திங்கள், 3 மார்ச் 2008 (10:19 IST)
சிட்னியில் நேற்று நடைபெற்ற சி.பி.தொடர் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆஸ்ட்ரேலிய ரசிகர்களை நோக்கி குரங்கு சேஷ்டைகள் செய்ததாக ஒரு புதிய அவதூறு கிளப்பப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய அணி நிர்வாகிகள் கூறுகையில் இது குறித்த எந்த விதமான புகாரையும் ஆட்ட நடுவர் ஜெஃப் குரோ அனுப்பவில்லை என்றும் இது முழுக்க முழுக்க ஆஸ்ட்ரேலிய ஊடகங்களின் கற்பனையே என்றும் கடுமையாக மறுத்துள்ளது.
ஹர்பஜன் மீது மீண்டும் சர்ச்சையை கிளப்பி அவரை தளரச் செய்யும் நோக்கத்துடன் இந்த பிரச்சாரத்தை ஊடகங்கள் செய்வதாக இந்திய அணி நிர்வாகி பிமல் சோனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிட்னி மார்னிங் ஹெரால்ட், தி டெய்லி டெலிகிராப் ஆகிய பத்திரிக்கைகள் ஹர்பஜன் ஆஸ்ட்ரேலிய ரசிகர்களை நோக்கி குரங்கு சேஷ்டைகள் செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் ரசிகர்களும் ஹர்பஜனை வசை பாடியதாக அந்த பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
ஆனால் ஆஸ்ட்ரேலிய முன்னாள் அணித் தலைவர் ஆலன் போர்டர் ஊடகங்களின் இந்த செய்கையை வன்மையாக கண்டித்துள்ளதோடு, ஹர்பஜன் அது போன்ற எந்த விதமான செய்கைகளையும் செய்யவில்லை என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆஸ்ட்ரேலியாவில் தனது கடைசி பயணத்தை மேற்கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கரின் அபாரமான வெற்றி சதத்தை மூடி மறைக்கும் விதமான இத்தைய புகார்கள் வெட்கக் கேடானவை என்று ஆலன் பார்டர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் சிட்னியின் ஆஸ்ட்ரேலிய ரசிகர்கள் ஹர்பஜனை தொடர்ந்து வசை பாடி வந்தனர் என்றும் ஹர்பஜன் அந்த சூழ்நிலைகளை நன்றாக கையாண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் ஃபீல்டிங் செய்த மைதானத்தின் அந்த பகுதியில் தான் சென்றபோது, ஆஸ்ட்ரேலிய ரசிகர்களின் வசைகளை கேட்கமுடிந்தது என்றும், ஹர்பஜன் அதனை திறமையாகக் கையண்டார் என்றும் அவர் சர்ச்சைக்குறிய எந்த விதமான செய்கைகளையும் செய்யவில்லை என்றும் ஹர்பஜனுக்கு தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது ஒரு பெரிய விஷயமே அல்ல என்றும் ஆலன் பார்டர் இந்த அவதூறுகளுக்கு முற்றுப்பபுள்ளி வைத்துள்ளார்.