இத்தாலிய டென்னிஸ் வீரர் லுஸ்ஸிக்கு 200 நாட்கள் தடை

சனி, 1 மார்ச் 2008 (11:20 IST)
சர்வதேச டென்னிஸ் ஆட்டங்களை வைத்து சூதாட்டம் ஆடியதற்காக இத்தாலிய டென்னிஸ் வீரர் ஃபெடெரிகோ லுஸ்ஸி என்பவருக்கு டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பு 200 நாட்கள் தடை விதித்துள்ளதோடு 50,000 டாலர்கள் அபராதமும் விதித்துள்ளது.

டென்னிஸ் சூதாட்டங்களில் ஈடுபட்டதற்காக தடை செய்யப்படும் 5வது இத்தாலிய டென்னிஸ் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2007 ஏப்ரல் வரை நடைபெற்ற 836 போட்டிகளில் 273 முறை லுஸ்ஸி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டென்னிஸ் சூதாட்ட ஒழிப்பு கமிட்டி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் ஒரு முறை தான் ஆடிய போட்டி ஒன்றிலும் லுஸ்ஸி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இருப்பினும் சூதாட்டத்தை வைத்து விளையாட்டின் முடிவுகளை மாற்றியதற்கான சாட்சியங்கள் எதுவும் இவருக்கு எதிராக இல்லை.

கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி மற்றொரு இத்தாலிய வீரர் காலிம்பெர்டியும் சூதாட்ட காரணத்திற்காக 100 நாட்கள் தடை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

கடந்த ஆண்டு போலந்தில் நடைபெற்ற ஒரு டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் நிகோலெய் டேவிடென்கோவும், மார்டின் வஸ்ஸலோவும் ஆடியபோது ஆன் லைன் சூதாட்ட நிறுவனம் ஒன்று இந்த போட்டியை வைத்து சூதாடியது, இதில் டேவிடென்கோ பாதி ஆட்டத்திலேயே கால் காயம் என்று வெளியேறியதாக ஏ.டி.பி. டென்னிஸ் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்