ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தற்போது குவீன்ஸ்லாந்து அணியுடன் நடைபெறும் புரா கோப்பை உள் நாட்டுக் கிரிக்கெட் போட்டி அவரது கடைசி போட்டி என்று அவர் கூறியுள்ளார்.
1996ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது டெஸ்ட் வாழ்வை துவங்கிய கில்லெஸ்பி, 71 டெஸ்ட் போட்டிகளில் 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது டெஸ்ட் பந்து வீச்சு சராசரி 26.13. 1997 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹெடிங்லியில் நடைபெற்ற டெஸ்டில் ஒரு இன்னிக்சில் 37 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்தை சாய்த்தார்.
கடைசியாக இவர் ஆஸ்ட்ரேலிய அணிக்காக வங்கதேசத்தில் ஆடியபோது இரட்டை சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப் பட வைத்தார்.
ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் தனது தனிச்சிறப்பான பந்து வீச்சினால் உலக பேட்ஸ்மென்களை திணற அடித்த கில்லெஸ்பி 97 ஒரு நாள் போட்டிகளில் 142 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
காயம் காரணமாக 1999 மற்றும் 2003 உலகக் கோப்பைகளில் இவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பி.சி.சி.ஐ-யை எதிர்த்து துவங்கப்பட்ட இந்திய கிரிக்கெட் லீகில் இவர் விளையாடுவார் என்று தெரிகிறது.