ஆஸி. வீரர்களுக்கு ஐ.பி.எல். இறுதி கெடு!

புதன், 13 பிப்ரவரி 2008 (11:11 IST)
இந்தியன் பிரிமியர் லீகில் இணைய ஆஸ்ட்ரேலிய வீரர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையை இறுதி நாளாக ஐ.பி.எல் நிர்வாகம் கெடு நிர்ணயித்துள்ளது.

மேலும், ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து அனுமதிச் சான்றிதழ் பெறாமலேயே ஆஸ்ட்ரேலிய வீரர்கள் ஐ.பி.எல்-ல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று இந்திய பிரிமியர் லீக் தலைவர் லலித் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்பு, சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியத்தின் அனுமதிச் சான்றிதழை ஐ.பி.எல் கேட்டிருந்தது. தற்போது அந்த நிபந்தனையையும் ரத்து செய்துள்ளது.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள லலித் மோடி, அணிகளை வாங்கும் நிறுவனங்களுக்கு வரும் திங்களன்று வீரர்கள் பட்டியலை கொடுத்தாக வேண்டும், எனவே ஞாயிறுக்குள் அவர்கள் கையெழுத்திட வேண்டும், இல்லையேல் 3 ஆண்டுகளுக்கு ஆஸ்ட்ரேலிய வீரர்கள் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாது என்று கூறியுள்ளார்.

கிளென் மெக்ரா, ஷேன் வார்ன், லாங்கர், கில்கிறிஸ்ட் உள்ளிட்ட ஓய்வு பெற்ற வீரர்களுக்கு ஆஸ்ட்ரேலியா அனுமதி அளித்து விடும் என்று தெரிகிறது. ஆனால் கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியாவின் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு அனுமதி வழங்க கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா மறுத்து வருகிறது.

கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா விளம்பரதாரர்களுக்கும், ஐ.பி.எல்-ல் அணிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கும் விளம்பர வர்த்தகப் பிரசசனைகள் ஏற்படும் என்று கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா வீரர்களுக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த விவகாரத்தினால் ஆஸ்ட்ரேலிய வீரர்களுக்கும், கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. ரிக்கி பாண்டிங், ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் ஆகியோர் கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியாவின் முட்டுக்கட்டைகளை எதிர்த்து தங்கள் கருத்துகளை வெளில்யிடும் அளவிற்கு இந்த பிரச்சனை முற்றியுள்ளது.

இந்த நிலையில் வரும் ஞாயிறுக்குள் கையெழுத்திடுங்கள், இல்லையேல் 3 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல்-ல் விளையாட முடியாது என்று லலில்த் மோடி இறுதி கெடு வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்