இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான கபில்தேவிற்கு ஓய்வூதியத்தையும், பிற சலுகைகளையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கபில் தேவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
போட்டி அமைப்பான இந்திய கிரிக்கெட் லீகில் இணைந்ததற்காக, 30 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டிற்காக பாடுபட்ட தனக்கு வேண்டுமென்றே விதிகளை மாற்றி ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்தியுள்ளது என்று கபில் தேவ் தனது மனுவில் கூறியிருப்பதாக தெரிகிறது.
கடந்த 2000ஆவது ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அப்போது முதல் கபில் தேவிற்கு ஓய்வூதியம் வந்து கொண்டிருந்தது.
மேலும் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாஸ் உள்ளிட்ட சலுகைகளையும் பி.சி.சி.ஐ. நிறுத்தியுள்ளது.
கபில்தேவ் ஐ.சி.எல்.-ல் இணைந்த பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் முற்றியது.
இந்திய கிரிக்கெட் லீகில் விளையாடும் வீரர்களுக்கு விடுப்பு அளிக்கவேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பொதுத் துறை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுகு நெருக்கடி கொடுப்பதாகவும் கபில் தெரிவித்துள்ளார்.