பீஜிங்கில் சுற்றுச்சூழல் திருப்தி அளிக்கிறது : சர்வதேச ஒலிம்பிக் குழு!
ஞாயிறு, 3 பிப்ரவரி 2008 (16:29 IST)
சீனத் தலைநகர் பீஜிங்கில் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் காற்று மாசு குறைபாடு இருக்காது என்று சர்வதேச ஒலிம்பிக் குழு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தபோது காற்று மாசுபாடும், 1988ம் ஆண்டு தென் கொரியாவில் அதிக வாகன போக்குவரத்தும் பிரதான பிரச்சனையாக அமைந்தது. இவற்றை போட்டியாளர்கள் கடந்து வர வேண்டியிருந்தது.
அதனையடுத்து நடத்தப்படும் போட்டிகளில் இந்த குறைபாடுகள் முன்கூட்டியே கவனத்தில் கொள்ளப்படுகிறது.
பீஜிங் நகரை மேம்படுத்தவும், ஒலிம்பிக் போட்டிக்காகவும் சுத்தமான சுற்றுச்சூழல் நிலவ அந்நகர அதிகாரிகள் அதிக தொகை செலவழித்து வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 1998 முதல் 2006-ம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் மாசுபாட்டை மேம்படுத்த 16 பில்லியன் அமெரிக்க டாலரை சீனா அரசு ஒதுக்கியுள்ளது.
தூய்மையான காற்றிற்காக அந்நகரில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டும், போக்குவரத்து திட்டம் விரிவுபடுத்தப்பட்டும் வருகிறது.
சர்வதேச ஒலிம்பிக் குழு ஒருங்கிணைப்புக் குழு துணைத் தலைவர் கெவான் கோஸ்பர் கூறுகையில், "பீஜிங் நகரில் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முறையாக நடந்து வருகின்றன. சிட்னி, ஏதென்ஸ் நகரங்களில் நடந்த போட்டி அனுபவத்தை பீஜிங் பகிர்ந்துகொண்டது போல, இதன் அனுபவத்தை வரும் 2012-ம் ஆண்டு லண்டனில் நடக்கும் போட்டிகளின் போதும் பகிர்ந்துகொள்ளப்படும்" என்றார்.