தேவையற்ற விமர்சனங்கள் சானியா மிர்சாவின் ஆட்டத்திறனை பாதிக்கும் என்று அனைத்து இந்திய டென்னிஸ் கழக பொது செயலாளர் அனில் கண்ணா கூறினார்.
ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் போராடித் தோற்றார் சானியா மிர்சா. இதனால் சானியா கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
"சானியா சிறந்த வீராங்கனை; 2002 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து இந்திய மகளிர் குழுவில் இடம் பிடித்துள்ளார். கலப்பு இரட்டையர் போட்டியில் தங்கப் பதக்கமும், தோகா ஆசிய போட்டிகளில் இரண்டு வெள்ளி பதக்கமும் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர். ஆப்ரோ-ஆசியா போட்டிகளிலும் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
அவர் மீது தேவையில்லாத விமர்சனங்கள் கூறப்படுகிறது. இது மிகுந்த வருத்தத்திற்குரியது; நியாயமற்றது. இதனால் அவரது ஆட்டத்திறன் கடுமையாக பாதிக்கப்படலாம். ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு தகுதி பெறுவதிலும், உயர்ந்த இடத்தை பிடிக்கும் அவரது சாதனை முயற்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்," என்று கண்ணா கூறினார்.