ஆஸ்ட்ரேலிய அணி முறையாக நடந்து கொள்ள வேண்டும் - ஐ.சி.சி.!

புதன், 9 ஜனவரி 2008 (13:42 IST)
சிட்னி கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்ட்ரேலிய அணியினரின் அராஜகமான நடத்தைகள் குறித்து உலகம் முழுதும் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் வேளையில், ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்ட்ரேலிய அணியின் நடத்தையை மாற்றி கொள்ள அறிவுறுத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவை கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியாவை எச்சரித்துள்ளது.

முன்னாள் வீரர்கள், ரசிகர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் சிட்னி டெஸ்டில் ஆஸ்ட்ரேலிய அணியினரின் அராஜக நடத்தைகளை கண்டித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளதை கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா தங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஐ.சி.சி.-யின் தலைமை செயல் அதிகாரி மால்கம் ஸ்பீட் கூறியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அனைத்து நாடுகளும் கிரிக்கெட்டை சிறந்த உணர்வுடன் விளையாடுவது அவசியம் என்று கூறியுள்ள மால்கம் ஸ்பீட், சர்வதேச விளையாட்டு ஒன்றை நாம் சர்வதேச நெருக்கடியாக மாற்றியுள்ளோம், இது போன்ற போக்கு தொடரக்கூடாது என்பதில் ஐ.சி.சி. தீவிரமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16 ஆம் தேதி பெர்த் டெஸ்ட் துவங்குவதற்கு முன் இரு அணிகளின் தலைவர்களையும் அழைத்து சமரசம் செய்துவிக்க இலங்கையிலிருந்து ஆட்ட நடுவர் ரஞ்சன் மதுகல்லே வரவழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்