இந்திய கிரிக்கெட் வாரியம் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து இந்திய வீரர்கள் இன்று காலை சிட்னியிலிருந்து கேன்பரா புறப்பட்டுச் சென்றனர். நாளை ஆஸ்ட்ரேலியா உள்ளூர் அணியுடனான மூன்று நாள் போட்டி கேன்பராவில் துவங்குகிறது.
சிட்னியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களுக்கு எதிராக நடுவர் ஸ்டீவ் பக்னர் தீர்ப்புகளை வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் மூன்று போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது கிரிக்கெட் வாரியத்தை கோபத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து ஹர்பஜன் சிங் மீதான தடை நீக்கப்படும் வரை ஆஸ்ட்ரேலியா தொடரில் இந்திய அணி பங்கேற்காது என்றும், சர்ச்சைக்குரிய நடுவர் ஸ்டீவ் பக்னரை நீக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு நிபந்தனை விதித்தது. இதனால் ஆஸ்ட்ரேலிய சுற்றுப் பயணம் ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் சமரச முயற்சியை மேற்கொண்டு ஸ்டீவ் பக்னரை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. மேலும் ஹர்பஜன் மீதான மேல் முறையீட்டை விசாரிக்கும் வரை அவர் தொடர்ந்து விளையாடலாம் என்றும் அனுமதித்தது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியம் ஆஸ்ட்ரேலிய பயணம் தொடரும் என்று அறிவித்தது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு குறித்து கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு ஐ.சி.சி.யின் முடிவை வரவேற்பதாகவும் இந்திய அணி தொடர்ந்து ஆஸ்ட்ரேலிய தொடரில் விளையாடும் என்றும் கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா தெரிவித்தார்.
எனினும் ஆஸ்ட்ரேலிய தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நிலைமைக்கேற்ப முடிவெடுக்கப்படும். ஹர்பஜன் சிங் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து இந்திய வீரர்கள் இன்று காலை சிட்னியிலிருந்து கேன்பரா புறப்பட்டுச் சென்றனர். நாளை ஆஸ்ட்ரேலியா உள்ளூர் அணியுடனான மூன்று நாள் போட்டி கேன்பராவில் துவங்குகிறது.