ஹர்பஜன்சிங் 3 டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டத்தை தொடர்ந்து இந்திய அணி பயணத்தை தொடருவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு இன்று கூடி முடிவு எடுக்கிறது.
சிட்னியில் நடைபெற்ற 2வது டெஸ்ட்டியின் போது ஆஸ்ட்ரேலிய வீரர் சைமன்ட்ஸை இனவெறியுடன் பேசியதாக ஹர்பஜன் சிங் மீது புகார் கூறப்பட்டது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி நடுவர் மைக் பிராக்டர் முன்னிலையில் நடந்த விசாரணை முடிவில் ஹர்பஜன்சிங்குக்கு 3 டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. நடுவர்கள் புகார் எதுவும் தெரிவிக்காத நிலையில் ஹர்பஜனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த தடையை எதிர்த்து 24 மணி நேரத்துக்குள் அப்பீல் செய்ய வேண்டும். இதனால் இந்திய அணி திட்டமிட்டபடி நேற்று காலை 10.30 மணிக்கு கான்பராவுக்கு செல்ல வேண்டிய தனது பயணத்தை தள்ளி வைத்தது.
இந்தநிலையில், ஹர்பஜன்சிங்குக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து ஆலோசிக்க இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூட்டம் சரத்பவார் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று நடந்தது. பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா விடுத்துள்ள அறிக்கையில், ஹர்பஜன் மீது சுமத்தப்பட்ட இனவெறி புகார் அப்பட்டமான பொய். போட்டி நடுவர் மைக் பிராக்டர் அளித்த தீர்ப்பு சரியானது அல்ல. அதனை ஏற்று கொள்ள முடியாது. ஹர்பஜன் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். அதனை சர்வதேச கிரிக்கெட் பேரவை மறுபரிசீலனை செய்ய அப்பீல் செய்துள்ளோம்.
ஹர்பஜன்சிங்குக்கு விதிக்கப்பட்ட நியாயமற்ற தடையையும், பொய்யான குற்றச்சாட்டையும் எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் போராடும். நடுவர்களின் மோசமான முடிவுகள் வருத்தம் அளிக்கிறது. இது சர்வதேச கிரிக்கெட் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாகும். ஆஸ்ட்ரேலியா-இந்திய கிரிக்கெட் வாரியம் இடையே நல்ல உறவு நிலவி வரும் நிலையில் இதுபோன்ற வருத்தம் தரக்கூடிய சம்பவம் நடந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டி நடுவரின் முடிவை எதிர்த்து போராட முடிவு செய்துள்ளோம். அப்பீல் முடிவு வரும் வரை ஹர்பஜன்சிங் மீதான தடையை அமல்படுத்த கூடாது ஹர்பஜன்சிங் மீதான போட்டி நடுவரின் முடிவு கேள்விக்குரியதாகும். நடந்த சம்பவத்தின் அடிப்படையில் தான் அவர் விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தகவல் வரும் வரை சிட்னியை விட்டு வீரர்கள் செல்ல வேண்டாம் என்ற அறிவுரையின் படி அங்குள்ள ஓட்டலில் தங்கி உள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய துணை தலைவர் ராஜீவ்சுக்லா கூறுகையில், 8ஆம் தேதி (இன்று) காலை 7மணிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் எல்லா பிரச்சினைகள் குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இந்திய அணி சிட்னியில் உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.
இன்று நடைபெறும் செயற்குழு கூட்டம் முடிவில் தான் இந்திய அணியின் பயணம் தொடருமா? என்பது தெரியவரும்.