ஹர்பஜன் சிங்குக்கு தடை எதிரொலி: இந்திய வீரர்கள் கேன்பரா செல்ல மறுப்பு!
திங்கள், 7 ஜனவரி 2008 (11:07 IST)
ஆஸ்ட்ரேலிய வீரர் சைமன்ட்ஸை இனவெறியுடன் திட்டியதாக கூறி ஹர்பஜன் சிங்குக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்ததைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் கேன்பரா பயணம் தாமதமாகியுள்ளது.
ஹர்பஜன் சிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்த ஆணையின் நகல் கிடைக்கவில்லை என்பதால், அது கிடைத்த பிறகே தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியும் என்பதால் அதை எதிர்பார்த்து இந்திய அணி காத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் ஆஸ்ட்ரேலிய வீரர் பிராட் ஹாக் மீது இந்தியா கொடுத்துள்ள புகார் குறித்து இன்று விசாரணை நடைபெறவிருப்பதாலும் இந்திய அணியின் பயணம் தாமதமாகியுள்ளது.
இதனிடையே ஹர்பஜன் சிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் இன்று காலை மும்பையில் உள்ள பிசிசிஐ தலைவர் சரத்பவார் வீட்டில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
ஆஸ்ட்ரேலியாவில் இந்திய அணியின் சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு வீரர்கள் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் அது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.