தாமத டிக்ளேர்- கவாஸ்கர் காட்டம்

வெள்ளி, 14 டிசம்பர் 2007 (10:47 IST)
பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் அனில் கும்ப்ளே தாமதமாக டிக்ளேர் செய்தார் இதனால் டெஸ்ட் தொடரை 2- 0 என்று வெற்றி பெற்றிருக்க வேண்டியதை தவற விட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

செய்திப் பத்திரிக்கை ஒன்றில் கவாஸ்கர் இது குறித்து எழுதிய போது, தினேஷ் கார்த்திக் அரை சதம் எடுத்து, ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணத்திற்காக விமானத்தில் அவருக்கு இடம்பிடித்துத் தருவது முக்கியமாகத் தெரிகிறது, தொடரை 2- 0 என்று வெல்வது முக்கியமல்ல போலும் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்து தொடரையும் 2- 0 என்று வெற்றி பெறும் வாய்ப்பை இது போன்று தவற விட்டோம், தற்போது பெங்களூருவில் வெற்றி பெற கிடைத்த வாய்ப்பை தாமதாக டிக்ளேர் செய்து கோட்டை விட்டுள்ளோம் என்று கவாஸ்கர் எழுதியுள்ளார்.

ஆஸ்ட்ரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் அவர்கள் 1- 0 என்ற வெற்றியில் திருப்தி அடையமாட்டார்கள். இதுபோன்ற மனோ நிலையுடன் ஆஸ்ட்ரேலியா சென்றால் அது எந்த விதத்திலும் உதவாது. ஆஸ்ட்ரேலியாவில் டெஸ்ட் தொடருக்கு முன் ஒரே ஒரு பயிற்சி ஆட்டம் மட்டுமே கொடுக்கப்பட்டது மூலம் இந்தியாவிற்கு ஏற்கனவே கஷ்ட காலம் துவங்கிவிட்டது என்று சிலர் அங்கு எழுத துவங்கிவிட்டனர்.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் அந்த பத்தியில் எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்