நிக்கி போயே விசாரிக்கப்பட்டார்!

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (18:33 IST)
2000ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் ஹான்சி குரோனியே சிக்கிய கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக அந்த அணியின் முன்னாள் வீரர் நிக்கி போயேவை டெல்லி காவல்துறையினர் இன்று விசாரணை செய்தனர்.

தென் ஆப்பிரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவருடன் இன்று காலை டெல்லி காவல்துறை அதிகாரிகள் முன்பு நிக்கி போயே ஆஜரானார்.

அவரது விசாரணை துவங்கியவுடன் போயேவுடன் வந்த தென் ஆப்பிரிக்க தூதரக அதிகாரி அங்கிருந்து சென்றார்.

தற்போது இந்திய கிரிக்கெட் லீகின் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் ஹீரோஸ் அணிக்கு விளையாடி வருகிறார் நிக்கி போயே.

இதற்கு முன்பு டெல்லி காவல்துறை விசாரணையை தவிர்க்க இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை போயே தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

2000 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி தோற்பதற்காக கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் பேரத்தில் ஈடுபட்டதாக அணித் தலைவர் குரோனியே, ஹெர்ஷல் கிப்ஸ் மற்றும் நிக்கி போயே உள்ளிட்ட வீரர்கள் மீது புகார் எழுந்தது.

இது குறித்து விசாரித்த தென் ஆப்பிரிக்காவின் கிங் விசாரணைக் கமிஷன் முன்பு குரோனியே தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். போயே மற்றும் கிப்ஸ் ஆகியோருக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டதோடு, 6 மாதம் தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி காவல்துறையினரால் இன்று போயே விசாரிக்கப்பட்டு வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்