ஒப்பந்தத்தில் கர்ஸ்டன் கையெழுத்து

புதன், 5 டிசம்பர் 2007 (15:22 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 2 ஆண்டு கால ஒப்பந்தத்தில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கர்ஸ்டன் கையெழுத்திட்டார்.

இவர் மார்ச் 1, 2008 முதல் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முழு நேர அளவில் பணியாற்றத் துவங்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செய்திகள் கூறுகின்றன.

இவரை பயிற்சியாளராக நியமிப்பது குறித்து இந்திய மூத்த வீரர்கள் சிலர் ஆட்சேபணை தெரிவித்ததாக வந்த பத்திரிக்கை செய்திகளை அடுத்து கேரி கர்ஸ்டன் தனது கையெழுத்திடும் முடிவை த‌ள்‌ளி‌ப்போட உள்ளதாக நேற்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷரத் பவார், மூத்த வீரர்கள் அனைவரும் கர்ஸ்டனின் வரவு குறித்து ஆர்வமாய் இருப்பதாக கர்ஸ்டனிடம் தெரிவித்ததையடுத்து அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்திய அணி இம்மாதம் ஆஸ்ட்ரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளுவதற்கு முன் அணி வீரர்களை தான் சந்திக்கவுள்ளதாக கேரி கர்ஸ்டன் தெரிவித்துள்ளார். பிறகு ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் 4வது டெஸ்டின் போது இந்திய அணியுடன் இணைந்து பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார்.

கர்ஸ்டன் முழு நேர பயிற்சியாளராக பொறுப்பெடுத்துக் கொள்ளும் தருணத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் துவங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்