''இந்தியா போன்ற திறமை வாய்ந்த அணிக்கு பயிற்சியாளராக இருப்பது மிகவும் சவாலான விஷயம்'' என தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் கேரி கர்ஸ்டன் கூறியுள்ளார்.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கேரி கர்ஸ்டன் நியமிக்கப்பட உள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் இந்திய அணித் தலைவரும், பயிற்சியாளர் தேர்வுக்குழுவை சேர்ந்தவருமான சுனில் கவாஸ்கர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இந்திய அணியின் பயிற்சியாளராக வர விருப்பமா என்று கேட்டார். அதனை மிகப் பெரிய கவுரவமாக கருதினேன். நிச்சயமாக இந்த வாய்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை.
அதன் பிறகு இந்தியாவுக்கு நேர்காணலுக்கு வர விருப்பமா என்று கேட்டனர். மகிழ்ச்சியோடு சம்மதித்தேன். எப்போது பயிற்சியாளர் பதவியை ஏற்பது என்பது தொடர்பாக கிரிக்கெட் வாரிய அதிகாரிகளோடு பேசிக் கொண்டிருக்கிறேன். டிசம்பர் மாதம் வரை எனக்கு தென் ஆப்பிரிக்காவில் வேலைகள் இருக்கின்றன. அது முடிந்த பிறகு இந்தியாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளேன்.
ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்பாக பயிற்சியாளராக பதவியேற்க முடியும் என்று நம்புகிறேன். இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தனது திறமைக்கேற்ப விளையாட உதவி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கும்.
இந்தியா போன்ற திறமை வாய்ந்த அணிக்கு பயிற்சியாளராக இருப்பது மிகவும் சவாலான விஷயம். ஆனால் மிகவும் சுவாரசியமானது. இந்தியா பற்றி நான் இதற்கு முன்னர் தெரிவித்த கருத்துக்களை பற்றி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அப்படி கூறியதாக கூட எனக்கு நினைவில்லை. எப்படியும் இந்தியாவுக்கு வருகை தந்து பயிற்சியாளர் பதவியை ஏற்க ஆர்வத்தோடு இருக்கிறேன் என்று கேரி கர்ஸ்டன் கூறியுள்ளார்.