இந்திய தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்க்காருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தாக்கீது அனுப்பியுள்ளது. மேலும் தடையை மீறி தொடர்ந்து பத்திரிகைகளில் வெங்சர்க்கார் எழுத விரும்பினால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
இந்திய தேர்வுக்குழு தலைவராக இருக்கும் முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் மராத்தி மொழியில் வெளியாகும் சாக்கல் என்னும் நாளிதழில் கட்டுரை எழுதி வருகிறார். தேர்வுக்குழு தலைவராக இருந்துகொண்டு பத்திரிகைகளில் வெங்சர்க்கார் கட்டுரை எழுதக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. ஆனால் இந்த தடையை மீறி வெங்சர்க்கார் பத்திரிகையில் கட்டுரை எழுதினார்.
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம், பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருவது குறித்து விளக்கம் கேட்டு வெங்சர்க்காருக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. பத்திரிகையில் எழுத விரும்பினால் தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கிரிக்கெட் வாரியம் தாக்கீதில் தெரிவித்துள்ளது.