தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியது. அங்கு வீரர்களுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
மழையையையும் பொருட்படுத்தாது, வீரர்களைக் காண ரசிகர்கள் விமான நிலைய வளாகத்தின் வெளியே ஆரவாரம் செய்தபடி நின்றிருந்தனர்.
அணியை வரவேற்க மஹாராஷ்டிர முதல்வர், விலாஸ்ராவ் தேஷ் முக், துணை முதல்வர் பாட்டீல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷரத்பவார், துணைத் தலைவர்கள் லலித் மோடி மற்றும் ராஜீவ் சுக்லா, செயலர் நிரஞ்சன் ஷா மற்றும் அணித் தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்கார் ஆகியோர் வந்திருந்தனர்.
இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி, அணி நிர்வாக மேலாளர் சுனில் தேவுடன் முதலில் வெளியே வந்தார். ரசிகர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்ட வீரர்கள், தேசியக் கொடியை காண்பித்து அவர்களை மேலும் உற்சாகப்படுத்தினர்.
விமான நிலையத்தில் இருந்து வான்கடே மைதானம் செல்லும் வழி நெடுக ரசிகர்கள் குவிந்திருந்தனர். வான்கடே மைதானத்தில் இப்போது இந்திய அணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.