தலைமைப் பொறுப்பை நான் அனுபவிக்கவில்லை : திராவிட்!

Webdunia

வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (21:19 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள ராகுல் திராவிட், தலைமைப் பொறுப்பு அனுபவிக்கக்கூடிய அளவிற்க சுவையானதாக இல்லை என்று கூறியுள்ளார்!

இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை செளரவ் கங்கூலிக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் ஏற்ற ராகுல் திராவிட், பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

துவக்கத்தில் தலைமைப் பொறுப்பு இன்பமாக இருந்தது. நான் அதை நேசித்தேன். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அது கடுமையானதாக ஆகிவிட்டது. அதுவரை நான் அனுபவித்துக் கொண்டிருந்த பலவும் தலைமைப் பொறுப்பை ஏற்றதனால் அனுபவிக்க முடியாதவை ஆகிவிட்டன.

எனவே, அப்பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொள்ள இதுவே சரியான தருணம் என்று நினைக்கின்றேன் என்று திராவிட் கூறியுள்ளார்.

ராகுல் திராவிட் இந்திய அணிக்காக 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,492 ரன்களை எடுத்துள்ளவர். அவருடைய பேட்டிங் சராசரி 56.50 ரன்கள். 25 டெஸ்ட் போட்டிகளில் ராகுல் திராவிட் தலைமையேற்று வழிநடத்தினார். அவற்றில் இந்தியா 8ல் வென்று 6ல் தோற்றது. 11 போட்டிகள் வெற்றி-தோல்வியின்றி முடிவடைந்தன.

திராவிட் தலைமையில் 79 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 42ல் வென்று 33 போட்டிகளில் தோற்றது. 4 போட்டிகள் வெற்றி - தோல்வியின்றி முடிந்தன.

அணித் தலைவர் பொறுப்பில் இருந்து திராவிட் விலகியுள்ளது பற்றி கருத்து கூறிய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவார், இங்கிலாந்து பயணத்தின் போதே அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள அவர் விருப்பம் தெரிவித்ததாகக் கூறினார்.

ராகுல் திராவி்ட் பதவி விலகல் கடிதம் ஏற்கப்படும் என்றும், வரும் 18 ஆம் தேதி இந்திய டெஸ்ட், ஒரு நாள் அணிகளின் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்