இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ராகுல் திராவிட் கடிதம் அனுப்பியுள்ளார்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சரத் பவாரை ராகுல் திராவிட் நேற்று சந்தித்துப் பேசியதாகவும், இந்த சந்திப்பிற்குப் பிறகு அவர் பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.
அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக ராகுல் திராவிட் கடிதம் அனுப்பியுள்ளதை கிரிக்கெட் வாரியப் பொறுப்பாளர்களில் ஒருவரான ரத்னாகர் ஷெட்டி உறுதி செய்துள்ளார்.
அணித் தலைவர் பொறுப்பில் இருந்து தான் விலகிக் கொண்டாலும், டெஸ்ட் அணியிலும், ஒரு நாள் அணியிலும் தொடர்ந்து ஆட விரும்புவதாகவும், இந்திய அணியின் ஆஸ்ட்ரேலிய பயணத்தில் பங்கேற்க தான் தயாராக இருப்பதாகவும் திராவிட் தெரிவித்துள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து பயணத்தில் சிறப்பாக விளையாடாததும், அணியை வழி நடத்திச் செல்வதில் ராகுல் திராவிட் எடுத்த சில முடிவுகள் உருவாக்கிய சர்ச்சையை அடுத்தே அவர் பதவி விலக முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.