சென்னையில் நடந்த ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் தென்கொரியாவைத் தோற்கடித்து சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு மக்களவை பாராட்டு மழை பொழிந்தது.
ஆசியக் கோப்பையை இந்தியா வென்றது மிகப்பெரிய பெருமையாகும் என்றும், இந்திய அணி நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளார்கள். அவர்களுக்கு பாராட்டுத் தெரிவிப்போம் என்று கூறிய அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, எதிர்காலத்திலும் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க இந்திய அணிக்கு பாராட்டு தெரிவிப்பதாகக் கூறினார்.
அவர் இவ்வாறு கூறியதும், உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டி பாராட்டுத் தெரிவித்தனர்.
நமது நாட்டு விளையாட்டில் அதிகம் முன்னுரிமை அளிக்கப்படாத கால்பந்து, ஹாக்கி அணிகள் அடுத்தடுத்து வெற்றி பெற்றிருப்பது பெருமைக்குரியது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரும், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவருமான பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறினார்.
அப்பொழுது குறுக்கிட்ட அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, பெருமை சேர்த்த அந்த விளையாட்டுக்களில் வில் வித்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
மாநிலங்களவையில் அவைத் துணைத் தலைவர் ரஹ்மான் கான், இந்திய அணியின் வெற்றிக்கு பாராட்டுத் தெரிவித்தார்.