இந்தியா - இங்கிலாந்து 2 வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்

Webdunia

வெள்ளி, 27 ஜூலை 2007 (09:51 IST)
மழை சரியான நேரத்தில் பொழிந்து ஆட்டத்தை நிறுத்தியதால் லார்ட்ஸ் டெஸ்டில் நிச்சயமான தோல்வியிலிருந்து தப்பித்த இந்திய அணி தனது திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றே தீர்வது என்ற உறுதியுடன் இரண்டாவது டெஸ்டில் இன்று களம் இறங்குகிறது.

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரன்ட்பிரிட்ஜில் துவங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கும் மழையாலும், வெளிச்சம் இன்மையாலும் பாதிக்கப்படலாம் என்று வானிலை கூறியுள்ளது.

மேலும், பந்து வீச்சாளர்களுக்கும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் வாய்ப்பான இந்த மைதானத்தில் இந்திய அணியின் அனுபவமிக்க பேட்ஸ் மேன்களுக்கு கடும் சோதனை காத்திருக்கிறது. முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பலமான துவக்கத்தை இந்தியா பெறவில்லை. இந்த டெஸ்டில் ஜாப்பர், கார்த்திக் நல்ல துவக்கத்தை தரவேண்டும என்று இந்திய அணி எதிர்பார்க்கிறது.

முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பொறுப்பாக விளையாடிய கங்குலி முழு உடல் தகுதி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யுவராஜ் சிங் 12 வது ஆட்டக்காரராக சேர்க்கப்பட்டுள்ளார். அணியிலும் எந்தவித மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது.

அதேபோல் இங்கிலாந்து அணியிலும் எந்தவித மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. சைடுபாட்டம், ஆண்டர்சன் ஆகிய வேக பந்து வீச்சளர்களுக்கு அனுபவம் இல்லை என்றாலும், இவர்களின் வந்து வீச்சு இந்திய பேட்ஸ் மேன்களை நிலை குலைய செய்யும்.

இந்திய அணிக்கு நிர்பந்தம் அதிகமாக இருப்பதாக அணித் தலைவர் திராவிட் தெரிவித்துள்ளார். சிறப்பாக ஆடுவதே முக்கியம் என்றும், இளம் வீரர்களிடம் நிறைய எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்