பயிற்சியாளர் பதவியை நிராகரித்தார் ஃபோர்ட்!

Webdunia

திங்கள், 11 ஜூன் 2007 (17:40 IST)
இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்த பயிற்சியாளர் பொறுப்பை கிரஹாம் ஃபோர்ட் நிராகரித்துவிட்டார்!

சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு கூடிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்புக் குழு, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த கிரஹாம் ஃபோர்டை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்தது.

பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழு கூடி அங்கீகரித்து அவருக்கு நியமனம் அளிக்கும் என்று கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் சீனிவாசன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை தான் ஏற்க இயலாத நிலையில் உள்ளதாக ஃபோர்ட் அறிவித்துள்ளார்.

தற்பொழுது ஃபோர்ட் பயிற்சியாளராக இருக்கும் இங்கிலாந்தின் கென்ட் கிரிக்கெட் அணியின் இணையதளத்தில் கிரஹாம் ஃபோர்டின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்க முன்வந்துள்ள பயிற்சியாளர் பொறுப்பை தான் மிகத் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தேன். கென்ட் கிரிக்கெட் கிளப்பின் பயிற்சியாளராகவே எனது பணியைத் தொடர முடிவு செய்துள்ளேன். என்னுடைய திறமையில் இந்தியா விருப்பம் தெரிவித்து எனக்கு கெளரவம் தந்தது. ஆனால் எனக்கும், எனது குடும்பத்திற்கும் இந்த முடிவே சிறந்ததாக இருக்கும் என்று கருதுகிறேன்" என்று ஃபோர்ட் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் கிரஹாம் ஃபோர்ட் அம்முடிவை நிராகரித்திருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்