ஜாஹீர் கான் காயம்! அயர்லாந்து பயணத்திற்கு சந்தேகம்!

Webdunia

திங்கள், 11 ஜூன் 2007 (14:58 IST)
இடுப்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இந்திய அணியின் அயர்லாந்து பயணத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர் கான் பங்கேற்பது சந்தேகமே என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆசிய, ஆஃப்ரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் ஜாஹீர் கானிற்கு இந்தக் காயம் ஏற்பட்டது என்றும், அவரை பரிசோதித்த உடல் நலிவு நீக்காளர் ஜான் குளோஸ்டர், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்க்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ள கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள், ஜாஹீர் கான் அயர்லாந்து பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவது சந்தேகமே என்று கூறியுள்ளதாக யு.என்.ஐ. செய்தி தெரிவிக்கிறது.

எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் என்ன முடிவு தெரிந்தது என்பது குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தேர்வுக் குழு முடிவெடுக்கும் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

நேற்று நடந்த போட்டியில் 3வது ஓவரில் 4 பந்துகளை வீசியிருந்த நிலையில், மேலும் பந்து வீச முடியாமல் ஜாஹீர் கான் வெளியேறினார்.

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இம்மாதம் 26 ஆம் தேதி முதல் அயர்லாந்தில் 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. அதன்பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாட அந்நாட்டிற்குச் செல்கிறது. (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்