ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா
; காங்கிரஸில் இருந்து விலகினார்
புதன், 19 பிப்ரவரி 2014 (12:58 IST)
FILE
ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் எம்.எல்.ஏ. பதவி, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி அனைத்தில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது,
பல முறை வேண்டாம் என்று வலியுறுத்தியும் எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசு சிறிது செவி சாய்க்காமல் தெலங்கானா மசோதாவை நிறைவேற்றியுள்ளது. எனக்காக கட்சியிடம் நான் எதையும் கேட்கவில்லை. மக்களின் நலனுக்காக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினேன். ஆனால் அது நடக்கவில்லை.
எனவே நான் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவி, எம்.எல்.ஏ, முதல்வர் ஆகிய அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன் இதை கனத்த இதயத்தோடு கூறுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தெலங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து, இன்று சீமாந்திரா பகுதிகளில் முழு அடைப்பு நடந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.