டெஹெல்கா நிறுவனர் தேஜ்பால் மீது பாலியல் விசாரணை - கோவா முதல்வர்

வியாழன், 21 நவம்பர் 2013 (19:58 IST)
லஞ்சம் வாங்கிய காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய டெஹெல்கா பத்திரிக்கையின் நிறுவனர் தருண் தேஜ்பால் மீது பாலியல் விசாரணை நடைபெறும் என்று கோவா முதலமைச்சர் கூறியுள்ளார்.
FILE

டெஹெல்கா செய்தி நிறுவனம், பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கும் காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தின் புலனாய்வு செய்தி இதழுக்காக செய்தி சேகரிக்க கோவா ஓட்டலில் பத்திரிக்கையாளர்கள் குழு தங்கியிருந்த போது, அதன் நிறுவனத் தலைவர் தருண் தேஜ்பால் இரண்டு முறை என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார் என்று பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குற்றம் சாற்றினார். இந்த குற்றச்சாற்று குறித்து அந்த இளம்பெண்ணின் நெருங்கிய நண்பர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தருண் தேஜ்பாலிடம் விசாரணை நடத்த கோவா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தருண் தேஜ்பால், 6 மாத காலத்திற்கு பதவியிலிருந்து விலகி இருப்பதாக இ-மெயில் அனுப்பியுள்ளார். இதையடுத்து முறையான அறிக்கையை பெற அந்த இளம் பெண்ணை காவல்துறையினர் அணுகியுள்ளனர். மேலும் அந்த பத்திரிக்கையின் செய்தி ஆசிரியர் சோமா சவுத்ரியும் விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இது சட்டப்பூர்வமான வழக்கு அல்ல. இப்பிரச்சனையை அலுவலக மட்டத்தில் தீர்த்துகொள்ள முடிவெடுத்தோம்; இந்த வழக்கை அந்த பெண் தொடர்ந்திருக்கவில்லை என்றும் செய்தி ஆசிரியர் சோமா சவுத்ரி கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியதாவது:-

இந்த குற்றச்சாற்று குறித்து விசாரணை நடத்த நாங்கள் உத்தரவிட்டு இருக்கிறோம். இதற்கு எந்த புகார்களும் தேவையில்லை. இந்த குற்றச்சாற்றுகள் உண்மையாக இருக்குமானால், காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்வார்கள். என்னை பொறுத்தவரையில், குற்றம் நிகழ்ந்து இருக்கிறது என்று அவர் கூறினார்.

இப்பிரச்சனை குறித்து அலுவலக மட்டத்தில் விசாரணை நடத்தப்படும் என்று டெஹெல்கா நிறுவனம் கூறியுள்ளது. தேஜ்பால் என்ன கடவுளா, அவர் மீதான விசாரணையை தேசிய பெண்கள் கமிஷன் கண்காணிக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்