வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்கிறதா?- ப.சிதம்பரம் மறுப்பு
செவ்வாய், 5 பிப்ரவரி 2013 (11:29 IST)
FILE
நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்கப்பதாக பெண்கள் அமைப்பு கூறுவது தவறானது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டப்பிரிவுகளை நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைத்திருந்தது. அவற்றில் பல்வேறு யோசனைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. மேலும் பலவற்றையை அவசரச் சட்டத்தில் சேர்க்கவில்லை என்று பெண்கள் அமைப்பினர் மத்திய அரசின் மீது குற்றம்சாற்றினர்.
எனவே, இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்க கூடாது என்று அவர்கள் கூறினர்.
இது குறித்து பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஒரு மசோதா கொண்டுவரப்பட்டு, விவாதிக்கப்படும். அதன்மீது விரிவான கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்னரே சட்டம் இயற்றப்படும்.
புதிய சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றும் வரை, குற்றவாளிகளுக்கு அவசரச் சட்டம் தடையாக விளங்கும். வர்மா கமிட்டியின் அனைத்துப் பரிந்துரைகளும் அவசரச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்றாலும், அதன் எந்த ஆலோசனையும் நிராகரிக்கப்படவில்லை.
டெல்லி மாணவி வழக்கைப் பொறுத்த வரை குற்றவியல் சட்டம் மட்டுமே பொருந்தும் என்றால், அதற்கு அவசரச் சட்டம் பொருந்தாது. அவை இரண்டையுமே இணைக்க முடியாது.
மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் அவசர அவசரமாச் செயல்பட்டதாகக் கூறப்படுவது சரியல்ல. இதை இயற்ற வேண்டிய அவசியம் இருந்தது. நாம் ஒரு மிகத்தீவிரமான பிரச்னையைச் சமாளிக்கிறோம். இந்த விவகாரத்தை அறிவுப்பூர்வமாக அணுகுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
சில பரிந்துரைகள் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை அன்றாலும், அவசரச் சட்டத்தின் வழிமுறைகள், இவ்வழக்கு விசாரணை வேகமாக நடந்து முடிய உதவும் என்றார் சிதம்பரம்.