''கருணாநிதி போல கர்நாடகாவில் செல்வாக்குமிக்க தலைவராக உருவாகுவேன்'' என்று அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
பா.ஜ.க.விலிருந்து விலகிய கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கர்நாடகா ஜனதா என்ற புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார்.
இதனிடையே கட்சியின் முதல் பிரமாண்ட பொது கூட்டத்தை லிங்காயத் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ஹவேரியில் நடத்தி மக்களை அசத்தினார்.
இதனை அடுத்து செதியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசியலில் மாநிலக் கட்சிகள் செல்வாக்கு செலுத்துகிற காலத்தில், கர்நாடகத்தில் அப்படியான ஒரு மாநிலக் கட்சி தலைவர் இதுவரை இல்லை. இப்போது அதற்கான காலம் வந்துவிட்டது.
குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி பிரதமராகிறாரோ இல்லையோ, நான் மீண்டும் பா.ஜ.க.வுக்கு செல்ல மாட்டேன். அவர்கள் என்னிடம் என்னதான் கெஞ்சிக் கேட்டாலும் நிச்சயமாக பா.ஜ.க.வுக்கு நான் போகமாட்டேன் என கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் பலர் மாநிலக் கட்சி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முழு மனதோடு அதைச் செய்யவில்லை. அதனால் அவர்கள் தோல்வி அடைய நேர்ந்தது.
அதே நேரத்தில் முலாயம்சிங் மற்றும் கருணாநிதி அதில் வெற்றி பெற்றுள்ளனர். இப்போது மாநிலக் கட்சிகளின் காலம். நான் முழு அளவில் தீவிரமாக செயல்படப் போகிறேன். அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என பார்க்கத்தான் போகிறீர்கள்.இதன் விளைவாக கர்நாடக மாநிலத்தின் ஒரு கருணாநிதியாக, முலாயம்சிங்காக நான் இருப்பேன் என்று எடியூரப்பா கூறினார்.